இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு இவ்வளவு பவர் இருக்கா.? கயிறு விற்பனையில் கால் பதிக்கும் மத்திய அரசு - 6,474 பெண்கள் கைமேல் பெற்ற பலன்!

இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு இவ்வளவு பவர் இருக்கா.? கயிறு விற்பனையில் கால் பதிக்கும் மத்திய அரசு - 6,474 பெண்கள் கைமேல் பெற்ற பலன்!

Update: 2019-11-29 14:03 GMT

இந்தியாவில் கயிறுத் தொழில், ஏற்றுமதி சார்ந்த தொழிலாக உள்ளது. எனினும், இந்தியாவிலும் கயிறுப் பொருட்கள் விற்பனை, மாநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களைத் தாண்டி, பிற பகுதிகளிலும் பிலபரமடைந்து வருகிறது. இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையை கணக்கிடும் போது, நாட்டில் உற்பத்தியாகும் மொத்த கயிறுப் பொருட்களையும் வாங்கும் திறன் உள்நாட்டு சந்தைக்கு உள்ளது என கருதப்படுகிறது. எனவே, கயிறுப் பொருட்களின் பயன்பாட்டைப் பிரபலப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக, மத்திய அரசின் கயிறு வாரியம் மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களில் 30 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.


தேவைக்கு ஏற்ப பழைய விற்பனை மையங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இந்தூர், நவி மும்பை, லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்கள் கயிறு வாரியத்தால் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு விட்டன.


சென்னை, மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.


மேலும், கயிற்றால் தயாரிக்கப்படும் துணி வகைகளுக்கு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் பெறப்பட்டிருப்பதுடன், கதர் கிராமத் தொழில் கழகத்துடன் இணைந்து, கதர் விற்பனை மையங்களில் கயிறுப் பொருட்களை விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கயிறு உற்பத்தித் தொழிலை நவீனப்படுத்தும் நோக்கில், இளைஞர்கள் மற்றும் பெண் கைவினைஞர்களுக்கு அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,474 பெண் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Similar News