15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாவோயிஸ்டு தலைவன் மராட்டியத்தில் கைது

15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாவோயிஸ்டு தலைவன் மராட்டியத்தில் கைது

Update: 2022-09-19 11:15 GMT

15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவன் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்தபோது மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மாவோயிஸ்டு இயக்கத் தலைவர் தீபக் யாதவ் என்ற காருகுலாஸ் யாதவ். இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தின் ஜார்கண்ட் மாநில பிராந்திய கமிட்டி உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்டு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவரை ஜார்கண்ட் மாநில போலீசார் தேடி வந்தனர் .


மேலும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள இவரை பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு 15 லட்சம் சன்மானமும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் காருகுலாஸ் யாதவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த காயத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிகாலை மாவோயிஸ்டு தலைவர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நாலச் சோப்ரா குடிசைப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் .


அப்போது அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த மாவோயிஸ்டு தலைவர் காரு குலாஸ் யாதவை  அதிரடியாக கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஜார்கண்ட் மாநில போலீசருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணைக்கு பிறகு காருகுலாஸ் யாதவ் ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.





 


Similar News