சென்னை மக்களுக்காக காவிரி நீர் மூலம் வீராணம் ஏரியை நிரப்பிய அதிகாரிகள் ! இராட்சச குழாய்கள் மூலம் புழலுக்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு

சென்னை மக்களுக்காக காவிரி நீர் மூலம் வீராணம் ஏரியை நிரப்பிய அதிகாரிகள் ! இராட்சச குழாய்கள் மூலம் புழலுக்கு வரும் காவிரி நீர் அதிகரிப்பு

Update: 2019-04-12 14:41 GMT


கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் மழை இல்லாததால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வெய்யில் காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் குறித்து சென்னைவாசிகள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.


இந்த நிலையில் சென்னைக்கு குடி நீர் சப்ளை செய்யும் வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து விட்டது. சென்னைக்கு வீராணம் ஏரியை விட்டால் வேறு சுலபமான வழி எதுவும் இல்லை. இந்த நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது தமிழக அரசு.  


இதையடுத்து கடந்த மாதம் 31-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது.


பின்னர் கடந்த 4-ந் தேதி கீழணைக்கு தண்ணீர் வந்தது. அங்கிருந்து கடந்த 8-ந் தேதி 2 ஆயிரம் கனஅடி நீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.40 அடியாக உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.


கீழணையில் இருந்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருந்தது.


இதையடுத்து நேற்று இரவு வீராணம் ஏரி முழுக்கொள்ளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி தற்போது கடல்போல் காட்சி அளிக்கிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து இன்று 1,300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.


சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை. வீராணம் ஏரியை நம்பியே சென்னை மக்கள் உள்ளனர்.


வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் அளவு விரைவில் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். தமிழக அரசின் இந்த போர்கால நடவடிக்கையால் சென்னை மக்களும், வீராணம் ஏரியை பயன்படுத்தி விவசாயம் செய்யும் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  https://www.maalaimalar.com/News/State/2019/04/12154021/1236893/Veeranam-Lake-filled-in-Summer-Season.vpf


Similar News