கொரிய கடற்படைக் கப்பல்கள் சென்னை வருகை - பின்னணி என்ன?

நட்பை வலுப்படுத்தும் நல்லெண்ண பயணமாக கொரியாவின் இரண்டு கடற்படை கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தன.அவற்றில் 470 வீரர்களும் வந்தனர்.

Update: 2022-09-29 05:15 GMT

இந்தியாவுடன் நட்பை மேம்படுத்த வகையில் தென்கொரியாவின் ஆர். ஓ. கே .எஸ் ஹன்சாண்டோ மற்றும் ஆர்.ஓ கே. எஸ்  டேச்சியோங் இரு கடற்படை கப்பல்கள் நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தன. மேலும் ரியர் அட்மிரல் காங் தலைமையில் 470 கடற்படை வீரர்களும் வந்து சேர்ந்தனர். இந்த கப்பல்கள் மற்றும் கொரிய கடற்படை வீரர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் ரியர் அட்மிரல் காங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-


தென்கொரிய கடற்படை கப்பல்கள் 110 நாட்கள் நீண்ட பயணத்தை கடந்து இரண்டாம் தேதி தொடங்கி இந்தோ பசிபிக் பிராந்தியத்தை சுற்றியுள்ள வியட் நாம்,மலேசியா, இந்தியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ள பத்து துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு வருகை தந்துள்ளோம். அத்துடன் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வருகை தந்துள்ள வீரர்கள் கொரியா கடற்படை அகாடமியை சேர்ந்தவர்கள். இந்த பயணம் நாடுகளுடன் நல் உறவுகளை வெளிப்படுத்தவும் பரஸ்பரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைக்கிறோம். கடந்த 1975 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இந்தியாவுக்கு வருவது இது 16-வது முறையாகும்.


முன்னதாக கடந்த 2014 மற்றும் 15 ஆம் ஆண்டுகளிலும் இந்தியாவிற்கு வருகை தந்தோம். தற்போது 'டோங்-கூ கொரியா' நான்காவது ஆண்டுக்கான கடற்படை வீரர்களுக்கான பயிற்சி திட்டமாக இது உருவாக்கப்பட்டது.அதில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல்களில் வந்துள்ள கொரியா கடற்படை வீரர்கள் வருகிற 1 ஆம் தேதி வரை சென்னையில் தங்கி இருப்பார்கள். நாளை சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். குறிப்பாக சென்னையில் வசிக்கும் கொரியா நாட்டு மக்களுடன் இணைந்து மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதன் விழிப்புணர்வு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர்.


தொடர்ந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த இருக்கிறோம். நிகழ்ச்சிகளில் உள்ளூர் இந்திய பங்கேற்பாளர்களுடன் கொரிய கடற்படை வீரர்கள் பிராஸ் இசைக் குழு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அத்துடன் இந்திய பார்வையாளர்களுக்கு கொரிய கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தி காண்பிக்கின்றனர்.இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.





 


Similar News