பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம் - அமித்ஷா சூளுரை

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கூறினார்.

Update: 2022-10-06 16:30 GMT

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக கடந்த மூன்றாம் தேதி காஷ்மீருக்கு சென்றார். நேற்று அவர் அங்குள்ள பாரமுல்லாவுக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.அதில் அவர் பேசியதாவது:-

சிலர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு எங்களுக்கு யோசனை கூறுகிறார்கள் .பாகிஸ்தானுடன் ஏன் பேச வேண்டும் ?ஆனால் பாரமுல்லா மக்களுடனும் காஷ்மீர் மக்களுடனும் பேசுவோம். காஷ்மீர் மண்ணில் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. பயங்கரவாதம் என்ன சாதித்தது?கடந்த 1990 களிலிருந்து காஷ்மீரில் 42000 பேர் உயிரிழந்துள்ளனர்.காஷ்மீரை நாட்டிலேயே அமைதியான மாநிலமாக மாற்ற உறுதி கொண்டுள்ளோம். இந்த ஆண்டு காஷ்மீருக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.இது ஒரு சாதனை.கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் வெறும் 15000 கோடி முதலீடு மட்டுமே வந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் 56,000 கோடி முதலீட்டை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.


முதல்முறையாக அடிமட்ட அளவில் ஜனநாயகம் சென்று அடைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. சிலர் பாகிஸ்தானை பற்றி பேசுகிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களில் மின்சாரம் உள்ளது? ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் காஷ்மீரில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு கொண்டு வந்துள்ளோம். காஷ்மீர் வளர்ச்சி அடையாததற்கு அப்துல்லா குடும்பம், முப்தி குடும்பம், நேரு இந்திரா குடும்பமும் தான் காரணம். பெரும்பாலான ஆண்டுகள் இந்த குடும்பங்கள்தான் ஆட்சி செய்தன. அவர்கள் ஆட்சியில் மோசமான நிர்வாகம் ஊழல் ஆகியவை தலைவிரித்தாடின.இவ்வாறு அவர் பேசினார்.





 


Similar News