வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மாமல்லபுரம் - எதில் தெரியுமா?

தாஜ்மஹால் என்ற உலக அதிசயத்துடன் ஒப்பிடுகையில் மாமல்லபுரம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற இடமாக உள்ளது

Update: 2022-10-01 11:30 GMT

"சொர்க்கமே என்றாலும்                            அது நம்மூரைப் போல வருமா?" 

ஊரு விட்டு ஊரு வந்து படத்தில் கங்கை அமரன் எழுதிய இளையராஜா எஸ். ஜானகி பாடிய இந்தப் பாடலை கேட்கிறபோது நம்முள் சிலிர்க்குமே அது உண்மைதான்.

ஆமாம் தாஜ்மஹால் என்ற உலக அதிசயத்தை ஒப்பிடுகையில் நம்ம ஊரு மாமல்லபுரம் அதிக பார்வையாளர்களை பரவசப்படுத்தி அசத்தியிருக்கிறது என்றால் நம்புகிறீர்களா?உண்மைதான் கொரோனா வைரஸ்  பெருந்தொற்றால் நாட்டின் சுற்றுலா தளங்கள் எல்லாம் 'அற்ற குளத்தில் அழுநீர் பறவை போல' ஆல் அரவமற்று போயின. ஆனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 202-122 நிதி ஆண்டின் இந்திய சுற்றுலா தலங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறார்கள். அதுவும் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி பார்க்கிற நினைவு சின்னங்களில் தாஜ்மஹாலை நமது மாமல்லபுரம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது என்ற தகவல் மனதுக்குள் சாரல் ஆகிறது .


இது தொடர்பாக மதிய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் பல சுவாரசியங்களை அள்ளித் தந்திருக்கின்றன. அதில் இருந்து சில துளிகள் :-

*ஓராண்டில் மாமல்லபுரம் வந்து அங்குள்ள குடவரை கோவில்கள், ரதங்கள்,சிற்பங்கள் என பார்த்து ரசித்துச் சென்றுள்ள வெளிநாட்டினர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 984 .

*இதே காலகட்டத்தில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் வீற்றிருக்கும் காதல் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை கண்டு களித்து சென்ற வெளிநாட்டவரின் எண்ணிக்கை 38,922.

*முதல் 10 இடங்களை பிடித்துள்ள நினைவுச் சின்னங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இன்னும் நான்கு நினைவு சின்னங்கள் உண்டு. அவை சாளுவன்குப்பம் முருகன் கோவில் இங்கு 25 ஆயிரத்து 579 வெளிநாட்டினர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர்.

*செஞ்சிக்கோட்டை. இது இந்தியாவில் உள்ள எவரும்  உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது என மராட்டிய மாமன்னர் சிவாஜியினால் பாராட்டப்பட்டதாகும். இங்கு 10,483 வெளிநாட்டினர் வந்து வியந்து பார்த்து சென்றிருக்கிறார்கள்.

*திருமயம் மலைக்கோட்டை மியூசியம் 8,422 வெளிநாட்டினர் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

சித்தன்னவாசல் சமணர்கள் குகை கோவில். இங்கு 5,432 பேர் வந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினரில் 45.5% மாமல்லபுரம் வந்துள்ளனர். தாஜ்மஹாலுக்கு வந்தவர்கள் 12 .21 சதவீதத்தினர் ஆவார்கள். இந்தியாவின் கலாச்சார தலைநகரம் தமிழ்நாடு என்பதற்கு இந்த தரவுகளே சான்றாக அமையும்.





 


Similar News