பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு உயிரூட்டும் மோடி அரசு - எப்படி தெரியுமா?

Update: 2022-07-28 10:41 GMT

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்ட ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது.இதில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்து பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு புத்துயிரூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,64,156 ரூபாய் கோடி கொண்ட தொகுப்பு ஒதுக்க முடிவு செய்து அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தவிர பி.எஸ்.என்.எல் மற்றும் பி.பி.என்.எல் இணைப்புக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை புதுப்பிப்பதற்கான நிதி தொகுப்பு மூன்று முக்கிய கூறுகளை கொண்டிருக்கும் .

இது பி.எஸ்.என்.எல் சேவைகளின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பைபர் சேவையை விரிவாக்கவும் வழிவகுக்கும். இதுதவிர 25 ஆயிரம் கிராமங்களில் நெட்வொர்க் இணைப்பை மேம்படுத்துவதற்கு ரூபாய் ரூ.26, 316 கோடி ஒதுக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது .இது செறிவூட்டல் கவரேஜாக கருதப்படும்.

அரசு திட்டங்களில் செறிவூட்டல் அளவிலான சேவையை உறுதி செய்யும் வகையில் பிரதமரின் அறிவிப்புக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதைப்போல நாட்டின் எல்லைப் பகுதிகள் முழுவதிலும் தொலைத்தொடர்பு சேவை சென்றடைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரையை தயாரிக்குமாறு ராணுவம் ,உள்துறை, தொலைத்தொடர்பு மந்திரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. தற்போது மத்திய அரசு நிதிதொகுப்பு அறிவித்திருப்பதன் மூலம் இந்த நிறுவனம் விரைவில் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News