மதுரையில் எய்ம்ஸ் மோடிக்கு எடப்பாடி நன்றி கடிதம் !

மதுரையில் எய்ம்ஸ் மோடிக்கு எடப்பாடி நன்றி கடிதம் !

Update: 2018-12-19 12:35 GMT
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல்: பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி நன்றி கடிதம் !
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்காக தமிழக மக்கள் சார்பிலும், தனது சார்பிலும் நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தங்கள் தலைவி ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் வகையில் மருத்துவமனை தொடங்குவதற்கு வசதியாக தனது அரசு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் அளிக்கும் என்றும் அக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்தது. அதையடுத்து தஞ்சாவூர், பெருந்துறை, மதுரை தோப்பூர் உள்ளிட்ட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இவற்றில் மதுரை தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்து அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் இந்த மருத்துவமனை குறித்து எதிர்க்கட்சிகள் அவ்வப்போது சந்தேகங்களை எழுப்பி வந்தன. அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு நேற்று முன்தினம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிவித்தார். இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உறுதி செய்தார்.
மிகவும் பலனளிக்கும்...
மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இது மதுரை மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மருத்துவமனை திருமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருப்பரங்குன்றத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் அமையவுள்ளது. திருமங்கலம் ரயில் நிலையத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன. பஸ் போக்குவரத்தை பொறுத்தமட்டில் 24 மணி நேரமும் இங்கு பஸ் போக்குவரத்து உள்ளது. எனவே போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் எய்ம்ஸ் அமைவது தமிழக மக்களுக்கு மிகவும் பலனளிக்கும். எய்ம்ஸ் அமையவுள்ள தோப்பூர் பகுதியில் சுமார் 260 ஏக்கர் வரை அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. எனவே நிலம் கையகப்படுத்துதல் போன்ற பிரச்சினை இங்கு எழாது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்பவர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்க வாய்ப்புள்ளது.
நன்றி கடிதம்...
இப்படிப்பட்ட உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைக்கு ரூ. 1,264 கோடி செலவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்காக எனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் இப்படி ஒரு பெருமைமிக்க மருத்துவமனை அமைய வேண்டும் என்பதில் மறைந்த புரட்சித் தலைவி அம்மா மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த திட்டம் விரைவில் பூர்த்தியடைந்து மருத்துவமனை தொடங்குவதற்கு வசதியாக எனது அரசு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் அளிக்கும். அப்போதுதான் எங்கள் தலைவி ஜெயலலிதாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Similar News