பிரதமராக தொடர்ந்து நாட்டை வழி நடத்துவார் மோடி- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!
பிரதமராக தொடர்ந்து நாட்டை வழி நடத்துவார் மோடி என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி நாட்டை தொடர்ந்து வழி நடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயதாக இருப்பதால் அமித்ஷாவை அடுத்த பிரதமராக்க முயற்சிகளில் அவர் வாக்கு சேகரித்து வருவதாக கூறிய டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனத்திற்கு அமித்ஷா பதில் கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி தெலுங்கானாவில் சனிக்கிழமை நடந்த இறுதி கட்ட பிரச்சாரத்தில் அமித்ஷா பங்கேற்றார். பிரச்சாரத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அமித்ஷா கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் சார்ந்த இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் ஒன்றை கூற விரும்புகிறேன். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைத் தொடரும். ஐந்தாண்டுகள் அவர்தான் நாட்டை வழி நடத்துவார். தலைவர்களின் வயது வரம்பு பற்றி பாஜகவின் விதிகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி இருப்பதை நிரபராதி என தீர்ப்பு பெற்றது போல் கெஜ்ரிவால் உணர்கிறார்.
சட்டம் மீதான அவரது மோசமான புரிதலை இது காட்டுகிறது .தேர்தலில் தென் மாநிலங்களில் அதிக இடங்களை வென்று மாபெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும். தெலுங்கானாவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் கூறினார். மோடி பிரதமராக தொடர்வார் என்ற அமித்ஷாவின் கருத்தை ஜே.பி நட்டாவும் ராஜ்நாத் சிங் ஆகியோரும் எதிரொலித்தனர்.
SOURCE :Dinamani