நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் மீண்டும் நிறுத்தம்

எரிபொருள் கசிவால் நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் நாசாவின் திட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது .

Update: 2022-09-04 17:00 GMT

அமெரிக்கா நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப ஆர்ட்டெமிஸ் திட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இதற்காக 'ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் 'என்கிற மிகப் பிரமாண்டமான ராக்கெட்டையும் 'ஓரியன்' விண்கலத்தையும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா உருவாகியுள்ளது.

முதற்கட்டமாக ஓரியன் விண்கலத்தை முதலில் ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி பரிசோதிக்க நாசா முடிவு செய்துள்ளது இந்த திட்டம் 'ஆர்ட்டெமிஸ் 1' என்று அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி ஓரியன் விண்கலத்துடன் எஸ். எல் .எஸ் ராக்கெட்டை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கிய நிலையில் கடைசி நேரத்தில் ராக்கெட்டில் 4 என்ஜின்களில் மூன்றாவது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆர்ட்டெமிஸ் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது .

இந்த நிலையில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று ராக்கெட்டை நிலவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்திய நேரப்படி 11:47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது.ஆனால் கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்பாக ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசியத் தொடங்கியது.


நாசா என்ஜீனியர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் திட்டம் மீண்டும் நிறுத்தப்படுவதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாளை அல்லது நாளை மறுநாள் எஸ்.எல்.எஸ் ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் அடுத்த முயற்சியை நாசா மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





 


Similar News