தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு புதிய நிர்வாகிகள் : ஜே. பி நட்டா அறிவிப்பு

தேசிய அளவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று வெளியிட்டார்.

Update: 2023-07-30 15:15 GMT

இந்த ஆண்டு நடைபெறும் ஐந்து மாநில தேர்தல், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றுக்காக மத்தியில் ஆளும் பா.ஜனதா தீவிரமாக தயாராகி வருகிறது . இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தேசிய அளவில் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று வெளியிட்டார். அதில் 13 துணை தலைவர்கள் பி.எல் சந்தோஷ் உட்பட ஒன்பது பொதுச்செயலாளர்கள் 13 செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இதில் முக்கியமாக கட்சியின் புதிய தேசிய துணை தலைவர்களாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் மற்றும் உத்திர பிரதேச பா. ஜனதா தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான லட்சுமி காந்த் பாஜ்பாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாரிக் மன்சூரையும் சேர்த்து கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இரண்டு முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த அப்துல்லா குட்டி இந்த பதவியை அலங்கரித்து வருகிறார் .


இதை தவிர சத்தீஸ்கார் எம்.பி சரோஜ் பாண்டே அந்த மாநில பழங்குடி தலைவர் லதா உசேன் டி ஆகியோரும் துணைத்தலைவர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே பொதுச் செயலாளர்களாக இருந்த ஏழு பேர் மீண்டும் அந்த பதவியை பெற்றுள்ள நிலையில் தெலுங்கானாவின் முன்னாள் கட்சித் தலைவர் பாண்டி சஞ்சய் குமார் உத்திரபிரதேசம் எம்.பி ராதா மோகன் அகர்வால் ஆகியோர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் . கட்சியின் தேசிய செயலாளர்கள் பட்டியலிலும் புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .


அந்த வகையில் கேரள முன்னால் முதல் மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே அந்தோணியின் மகன் அனில் அந்தோணிக்கு பா.ஜ.க செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சுரேந்திர சிங் நாகர், காமாக்யா பிரசாத் தசா ஆகிய எம்.பி களும் கட்சியின் தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரியானா மாநில பொதுச்செயலாளராக சர்மாவும் அசாம் மற்றும் திரிபுரா பிரிவுகளுக்கு ஜி. ஆர்.ரவிந்திர ராஜூவும் இதே நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல அந்தமானுக்கு விவேக் ததாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


SOURCE:DAILY THANTHI

Similar News