தூய்மை பாரத திட்டம்: பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்த ஈஷா தன்னார்வலர்கள்!
தூய்மை பாரத விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் நேற்று (அக்.1) தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக, பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் ‘தூய்மை பாரதம்’ என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று முன்தினம் (செப்.30) வெளியிட்ட பதிவில் “நம் கோவில்களையும், வீதிகளையும், மிக முக்கியமாக, நம் மனங்களையும் சுத்தமாக வைத்திருக்க உழைப்பது நம் செழிப்பின் உச்சத்தை எட்டுவதற்கு ஒரு முக்கிய படியாகும். பாரதத்திற்கும், அது தொடர்ந்து உயர்வதற்கு அடித்தளமாக விளங்கும் ஆழமிக்க நாகரிகத்திற்கும், நம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமையட்டும்” என்று பதிவிட்டு இருந்தார்.
https://twitter.com/SadhguruJV/status/1708182790855164135
மேலும், அந்தப் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தூய்மை பாரத திட்டத்தின் செயல்பாடுகளை சத்குரு அவர்கள் பாராட்டி பேசி இருந்தார். மேலும், பொது இடங்களில் தூய்மையை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர் அக்.1-ம் தேதி நடைபெறும் தூய்மை பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.
இதை தொடர்ந்து கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள தாணிக்கண்டி, முள்ளாங்காடு, மடக்காடு, பட்டியார் கோவில் பதி, கொளத்தேரி, முட்டத்துவயல், காந்தி காலனி, செம்மேடு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். மேலும், அங்கு மக்களிடம் பொது இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய மேம்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர். இப்பணியில் ஈஷா தன்னார்வலர்களுடன் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.