பரவி கிடக்கும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Update: 2024-05-20 18:10 GMT

தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவிருக்கும் போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடங்கி மாநிலத்தின் மூலை முடுக்குகளெங்கும் தாராளமாக கிடைக்கும் கொடிய வகை போதைப் பொருட்களுக்கு இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருவதாக நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளிக்கின்றன.

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து கொண்டிருப்பதோடு, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் போதைப் பொருட்கள் புழக்கத்தை அடியோடு அழித்தொழிப்பதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் போதைப் பொருள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், கோவையில் மருந்து குப்பிக்குள் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை ஊசிகள் என போதைப்பொருட்களின் வணிக மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News