வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது. கடந்தாண்டு மே மாதத்திலிருந்து இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த தொடங்கியது. ஆறு தவணைகளாக மொத்தம் 2.5% உயர்த்தி உள்ளது. இதனால் தற்போது ரெப்போ ரேட் விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு அளித்த வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின.
கடனுக்கான தவணை தொகை உயர்ந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது .வட்டியை மேலும் ஒரு தடவை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்றும் அதன் பிறகு வட்டியை உயர்த்துவதை நிறுத்தி வைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது .இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடந்தது. அதில் ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றம் செய்வது இல்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனால் வீடு ,வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் ஏறாது .இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வட்டி 6.5 சதவீதமாக நீடிக்கும். இது தற்காலிக நிறுத்தம்தான் .நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் எதிர்கால கூட்டங்களில் வட்டியை உயர்த்த தயங்க மாட்டோம். சமீப காலமாக சர்வதேச பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .அதே சமயத்தில் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான கவலைகள் நீடிக்கின்றன .எனவே இப்போதைக்கு ரெப்போரேட் விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.