என்னைத் தோற்கடிக்க யார் வேண்டுமானாலும் பங்காளிகளாக மாறலாம் : கோவை மக்களுக்கு நன்மை செய்யவே போட்டியிடுகிறேன்-அண்ணாமலை!
கோவை மக்களுக்கு நன்மை செய்யவே போட்டியிடுகிறேன் என்றும் என்னை தோற்கடிக்க திமுக , அதிமுக சேர்ந்து போராடும் என்றும் அண்ணாமலை கூறினார்.
கோவை மக்களின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் நான் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். பா.ஜனதா கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்த 295 தேர்தல் வாக்குறுதிகளில் தற்போது அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. ஆனால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேற்ற வில்லை .அதே வாக்குறுதிகளை தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் திமுக அறிவித்து இருக்கிறது .
பிரதமர் மோடி என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறார் என்பது கோவை மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் அதை உணர்ந்து பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம். ஆனால் கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டபோது அறிவித்த தேர்தல் வாக்குறுதியை தற்போது வரை நிறைவேற்றவில்லை. இதே நிலை தொடர்ந்தால் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவர திமுக மற்றும் அதிமுக ஒன்றுசேரவில்லை. ஆனால் என்னை தோற்கடிக்க தேர்தலுக்கு கடைசி பத்து நாட்களில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பங்காளிகளாக மாறி போராடுவார்கள். ஆட்சி அமைந்த பின்னர் மீண்டும் கொள்ளையடிப்பது போன்ற செயல்களை தான் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு சொந்தமான ஒப்பந்ததாரர்களை தேர்தலில் போட்டியிடவும் செய்து வருகிறார்கள் .
தேர்தலுக்கு பணம் செலவிட மாட்டேன் என்று நான் பேசியது எடப்பாடி பழனிசாமி முழுமையாக கேட்கவில்லை. டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கி கொடுப்பவர் தான் அவர் .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. நான் வெற்றி பெற்றால் கோவை மக்களுக்கு எப்போதுமே நண்பனாக இருந்து மத்திய அரசுடன் இணைந்து கோவை மக்களுக்கு பல்வேறு வளர்ச்சிகளை கொண்டு வருவேன் .சட்டமன்ற தேர்தல் நடைபெற இரண்டு ஆண்டுகள் இருக்கிறது .
அதற்குள் நான் கோவை மக்களுக்கு செய்ய போகும் வளர்ச்சி பணிகளை பார்த்து கண்டிப்பாக கோவை மக்கள் பாஜகவுக்கு மீண்டும் வாக்களிப்பார்கள். நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்வது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தால் கைது செய்வது போன்ற செயலில் ஈடுபடும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகத்தை பற்றி பேச துளியும் கூட அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI