ஈரான் பெண்ணுரிமை ஆர்வலருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
அமைதிக்கான நோபல் பரிசு இந்த வருடம் ஈரான் பெண்ணுரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதுவிற்கு கிடைத்துள்ளது
மற்ற நோபல் பரிசுகள் அனைத்தையும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் உள்ள ராயல் வீடு அகாடமி அறிவிக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நார்வே நோபல் குழு அறிவிப்பது வழக்கம். அதன்படி ஐந்து பேரை கொண்ட நார்வே நோபல் குழு ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண்ணுரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து நார்வே நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பரிசை நர்கீஸ் முகமது-வின் மிக முக்கியமான பணிகளுக்காக முதல் மற்றும் முக்கியமான ஒரு அங்கீகாரமாகும். அவர் தனது பணியை தொடர இது ஒரு ஊக்கமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள நர்கீஸ் முகமது ஈரானில் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய நபராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
விஞ்ஞானி ஆன இவர் இளம் வயது முதலே சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பாக பெண்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து துணிச்சலான போராட்டங்களை முன்னெடுத்தவர் அவர் . இதற்காக அவர் பலமுறை சிறை சென்றுள்ளார். சோகம் என்னவென்றால் நர்கீஸ் முகமது இப்போதும் சிறையில் தான் உள்ளார்.
ஆனால் சிறையில் இருந்தாலும் பெண்களுக்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பதை அவர் இன்னும் நிறுத்தவில்லை. நர்கீஸ் முகமது அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19 ஆவது பெண் மற்றும் இரண்டாவது ஈரானிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE :DAILY THANTHI