நிரம்பி வழியும் சீன ஆஸ்பத்திரிகள் - உருமாறிய கொரோனா ருத்ர தாண்டவம்

சீனாவில் உருமாறிய கொரோனா ருத்ரதாண்டவம் ஆடுவதால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. அங்கு பலிகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-12-23 06:00 GMT

சீனாவில் தற்போது கொரோனா வைரஸின் புதிய அலை எழுச்சி பெற்றுள்ளது. அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங் தென்மேற்கு பகுதி மற்றும் சிறிய நகரங்களில் வார்டுகள் நிரம்பி வழிகின்றனவாம். சீனாவின் தொழில் துறை மாகாணமான ஹீபெய் மாகாணத்தில் உள்ள ஜூஜோ நகரில் உள்ள நெரிசலான வார்டுகளில் ஆபத்தான நிலையில் உள்ள டஜன் கணக்கான வயதான நோயாளிகள் சக்கர நாற்காலியில் கொண்டு செல்லப்படுவதை பத்திரிகையாளர்கள் நேரில் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் கொரோனா புதிய ருத்ரதாண்டவம் ஆடுவதில் உரு மாறிய கொரோனாவின் பி.எப்.7 வகை முக்கிய பங்கு வகிக்கிறது.


கோவிட் கொள்கை என்ற பெயரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சீனா கொண்டு வந்த தீவிர கட்டுப்பாட்டு கொள்கை மக்களை விரத்தியில் ஆழ்த்தி போராட்டத்தில் குதிக்க வைத்தது. இதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டன. பலர் தங்கள் வீடுகளிலேயே சோதனை செய்து கொள்கின்றனர். அதன் பிறகு தான் இப்போதைய கொரோனாவே எழுச்சி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனாவால் உயிர்பலிகள் பெருகி வந்தாலும் கொரோனாவால் ஏற்பட்ட உயிர் பலிகளாக அவை காட்டப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறுகளால் உயிரிழப்புகள் நேரிடுவதாக தான் சீனா பதிவு செய்கிறது. பீகிங் பல்கலைக்கழகத்தின் முதலாம் எண் ஆஸ்பத்திரியின் தலைவர் 'வாங் கெய்கியாங்' ஏற்கனவே உள்ள உடல்நல பாதிப்புகளால் தான் நோயாளிகள் சாகிறார்கள் என கூறியுள்ளார். ஆனால் தகன மையங்கள் உடல்களால் நிரம்பி வழிவதாகவும் உடல்களை கவனம் செய்துவிட்டு அஸ்தியை பெறுவதற்காக மக்கள் கார்களில் காத்திருப்பதாகவும் காட்சிகள் வெளியாகி உள்ளன.


ஜூஜூ நகரில் இறுதிச்சடங்குக்குக்கான பொருட்களை விற்பனை செய்கிற கடைக்காரர்கள் ஒரு தகனமய ஊழியர் இது பற்றி கூறும்போது கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது முதற்கொண்டு சாவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதற்கு முன்பு தினமும் மூன்று அல்லது நான்கு உடல்களை எரித்த தகன மையங்களில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் தினமும் 20 முதல் 30 உடல்கள் எரிக்கப்படுகின்றன என்று தெரிவித்தனர். நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. ஆனால் அந்த நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் ஒன்றை கழித்து 5241 என சீன தேசிய சுகாதார கமிஷன் பதிவு செய்துள்ளது. இதற்கான காரணத்தை கூட பதிவு செய்யவில்லை. சீனாவின் கொரோனா நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதாக வருகிற தகவல்கள் கவலை அளிக்கின்றன என தெரிவித்தார்.





 


Similar News