செல்வம் அருளும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரக்கலக்கோட்டை கிராமத்தில் மத்தியபுரீஸ்வரர் என்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது.

Update: 2023-01-19 11:15 GMT

பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரக்கலக்கோட்டை மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காட்டாற்றின் இரண்டு கரைகள் வழியாக நடந்து சென்று இந்த கோவிலை அடையலாம். பரக்கலக் கோட்டை என்ற தென் சிதம்பரத்தில் வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பொது ஆவுடையார் கோவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் முக்கிய இடம் வகிக்கிறது சித்தம் எல்லாம் சிவன் பால் வைத்த வானகபர் மகா கோபர் என்ற இரண்டு பெரு முனிவர்களுக்கு இடையில் இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற வாதம் வந்தது அந்த வாதத்தை தீர்த்து வைப்பதற்காக சிவபெருமானை இவர்கள் இருவரும் வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் சிதம்பரம் எனும் தில்லையம்பலத்தில் அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு இரவு 12 மணிக்கு மேல் தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பரக்கலக்கோட்டை வெள்ளாள மரத்தின் கீழ் வந்து அமர்ந்தார். அப்போது இல்லறமே சிறந்தது என்று வானுகோபரும் துறவருமே சிறந்தது என்று மகா கோபரும் கடுமையாக வாதிட்டனர்.


இருவருடைய வாதங்களையும் கேட்ட இறைவன் இல்லறம் துறவறம் இரண்டுமே சிறந்தவை தான் என்றும் ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு இல்லை என்றும் மத்தியஸ்தம் செய்து வைத்ததால் இங்குள்ள இறைவன் மதியபுரீஸ்வரர் என்றும் முனிவர்கள் இருவருக்கும் பொதுவாக இருந்த உண்மை பொருளை உணர்த்தியதால் பொது ஆவுடையார் என்றும் அழைக்கப்படுகிறார் .


இத்தலத்தின் தலவிருட்சம் ஆலமரம் இத்திருத்தலத்தில் பல்வேறு மரங்கள் இருந்தாலும் வெள்ளால மரத்தின் கீழ் அமர்ந்த ஆலமர செல்வனுக்கு ஆலமரமே மிகவும் ஏற்புடையது என்றும் அனைத்திற்கும் மேலாக ஆலமரமே தலவிருட்சமாக அமைந்து தல மூர்த்தியாகவும் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பகலில் நடை திறக்கப்படாது. வருடம் முழுவதும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவு 12 மணிக்கு மட்டுமே இத்திருக்கோவிலில் நடைதிறக்கப்பட்டு ஆலமரத்தின் அடியில் சிவலிங்கமாக காடட்சி தரும் பொது ஆவுடையார் சுவாமியை தரிசனம் செய்யலாம். இதற்காக ஏராளமான பக்தர்கள் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு வந்து ஆலடி நாதனின் திருவருள் பெற்று செல்கிறார்கள். மற்ற நாட்களில் பகலில் இந்த ஆலயம் திறக்கப்படாது. வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே பகலில் கோவில் நடை திறக்கப்படும்.


தை மாதம் முதல் தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே காலை சூரிய உதயத்துக்கு பிறகு நடை திறக்கப்பட்டு மாலை சூரிய அஸ்தமனம் வரை  சன்னதி திறந்திருக்கும். வருடத்தில் ஒரே ஒரு நாள் தைப்பொங்கல் அன்று மட்டும் கோவில் திறக்கப்பட்ட இருப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. பொங்கல் திருநாளில் மட்டும் தான் இறைவனை பகலில் தரிசனம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கட்கிழமை சோமவார விழாவாக கொண்டாடப்படும். அதில் கடைசியாக வரக்கூடிய திங்கட்கிழமை கடைசி சோமவார திருவிழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் வெள்ளால மரத்தின் இலைகளையும் விபூதிகளையும் மட்டுமே பிரசாதமாக பக்தர்கள் பெற்றுச் சென்று தங்கள் வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும் வைத்து அடுத்த வருடம் வரையிலும் அவற்றை பாதுகாத்து வருகிறார்கள்.


இவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் நீங்காமல் நிலையாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் சோமவார விழாவுக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பரக்கல கோட்டைக்கு அரசு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

Similar News