பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களை மக்கள் பரிந்துரைக்கலாம் - மத்திய அரசு அழைப்பு

பத்ம விருதுகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை மக்கள் பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2023-05-02 14:00 GMT

கல்வி, கலை , இலக்கியம் , விளையாட்டு, சமூக சேவை ,வர்த்தகம் மற்றும் தொழில் துறை உள்ளிட்டவற்றில் சிறப்பை பெற்றவர்களூக்கும் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் எனப்படும் பத்ம விபூஷன் ,பத்மபூஷன், மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது . கடந்த 1954 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட பத்ம விருதுகள் நாட்டில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இவ்விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன .


இந்த நிலையில் பத்மவிருது பெற தகுதியானவர் என்று கருதுவோரின் பெயர்களை நாட்டின் அனைத்து குடிமக்களும் பரிந்துரைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பத்ம விருதுகளுக்கான முன்மொழிவுகள் பரிந்துரைகளை மே 1- ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான கடைசி தேதி வருகிற செப்டம்பர் 15 ஆகும்.


ராஷ்ட்ரிய புரஸ்கார் இணையதளமான http://awards.gov.in-ல் முன்மொழிவுகள் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். அனைத்து முன்மொழிவுகள் பரிந்துரைகளுடன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விகிதத்தில் சம்பந்தப்பட்டவர் பற்றிய விவரங்கள் இடம் பெற வேண்டும்.


இது தொடர்பான தகவல்களை மத்திய உள்துறை அமைச்சக இணையதளத்தின்(https://mha.gov.in) விருதுகள் மற்றும் பதக்கங்கள் பிரிவிலும் பத்ம விருதுகள் இணையதளத்திலும்(https://padmaawards.gov.in) அறியலாம் . பத்ம விருதுகள் தொடர்பாக விதிகளை https://padmaawards.gov.in//Aboutawards.aspx என்ற இணைப்பிலும் தெரிந்து கொள்ளலாம் .பத்ம விருதுகளை மக்களின் விருதுகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. எனவே அனைத்து குடிமக்களும் இந்த நடைமுறையில் பங்கேற்கலாம்.

Similar News