வளர்ச்சி திட்டங்களை தடுக்க 'நகர்ப்புற நக்சல்கள்'சதி - பிரதமர் மோடி

அரசியல் ஆதரவுடன் வளர்ச்சி திட்டங்களை தடுக்க 'நகர்ப்புற நக்சல்கள்' சதி செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Update: 2022-09-24 09:00 GMT

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் மாநில சுற்றுச்சூழல் மந்திரிகளின் தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. இதைக் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது நவீன உள் கட்டமைப்பு இல்லாமல் வளர்ச்சி இல்லாமல் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது சாத்தியமில்லை. ஆனால் வளர்ச்சி திட்டங்களை தடுக்க 'நகர்ப்புற நக்சல்களும்' வளர்ச்சிக்கு எதிரான சக்திகளும் சதி செய்து வருகிறார்கள்.


அவர்கள் இப்போதும் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். இந்தியாவில் வளர்ச்சியை தடுக்க உலக நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் ஒரு புயலையை உருவாக்குகிறார்கள். அவர்களின் தாளத்துக்கு ஏற்ப நகர்ப்புற நக்சல்கள் நடனமாடி வருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது. நீதித்துறை உலக வங்கி ஆகியவை மீது கூட செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். உதாரணமாக குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு பண்டித நேரு அடிக்கல் நாட்டினர்.ஆனால் அந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்ற போர்வையில் நகர்ப்புற நக்சல்கள் தடுத்தனர்.


பல ஆண்டுகளுக்கு தடுத்து வைத்தனர். நான் வந்த பிறகு தான் அந்த திட்டம் முடிக்கப்பட்டது. திட்டம் முடிவடைந்த பிறகு நகர்ப்புற நக்சல்களின் பிரச்சாரம் எவ்வளவு பொய்யானது என்று எல்லோரும் உணர்ந்து கொண்டனர். இன்று நர்மதை நிலப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆன்மீக தலமாக உருவெடுத்துள்ளது. நகர்புற நக்சல்களின் சதியை முறியடிக்க மாநிலங்கள் முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். மக்கள் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதால் நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கியுள்ளன.


இந்த அனுமதியை நிறுத்தி வைப்பதால் திட்ட செலவுகளும் அதிகரிக்கிறது என்பதை உணர வேண்டும்.எனவே தொழில் செய்ய எளிதான சூழ்நிலையை உருவாக்கக்கூடிய திட்டங்கள் முடங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது வனத்தின் பரப்பளவு அதிகரித்துள்ளது.சிங்கங்கள், புலிகள், யானைகள் ,ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், சிறுத்தைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சமீபத்தில் நபிபியாவில் இருந்து வந்த சிவிங்கி புலிகள் மக்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க இந்தியா இலக்கு நிர்ணயத்துள்ளது.


உயிரி எரிபொருள் பயன்பாட்டை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும் பெட்ரோலில் எத்தனாலை கலப்பது விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் பழைய வாகனங்களை உடைக்கும் மத்திய அரசின் கொள்கையை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.





 


Similar News