படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை - தேசிய ஒற்றுமை தினம் கொண்டாட்டம்
சர்தார் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று இன்றும் கொண்டாடப்படுகிற நாட்டின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த குஜராத் மாநிலத்தில் கேவடியாவில் சர்தார் சரோவர் அணை எதிரே சாது பெட் தீவில் 182 மீட்டர் உயரத்தில் ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்கே அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது நாட்டின் இந்த ஒற்றுமை நமது எதிரிகளுக்கு கண்களில் கலக்கத்தை தந்து வந்துள்ளது. இன்றைக்கு அல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே நமது ஒற்றுமையை குலைப்பதற்கு அன்னியர்கள் அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்தார்கள். அந்த நெடிய காலத்தில் பரப்பப்பட்ட விஷத்தால் இன்றைக்கு நாடு பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் நாட்டுப் பிரிவினையை பார்த்தோம். நமது எதிரிகள் அதை சாதகமாக்கி கொண்டார்கள். அந்த சக்திகள் என்றைக்கும் இருக்கின்றன. அவர்கள் இந்த நாட்டின் மக்கள் ஜாதி பிராந்தியம் மொழியின் பெயரால் சண்டை போட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் ஒருவரோடு ஒருவர் நிற்க முடியாத வகையில் வரலாறும் முன்வைக்கப்படுகிறது .
இந்த சக்திகள் நாம் அறிந்த வெளியில் இருந்து வந்த எதிரிகள் மட்டுமல்ல, பல நேரங்களில் அந்த சக்திகள் நமது அமைப்புக்குள் அடிமை மனநிலையின் வடிவத்தில் நுழைந்து விடுகின்றன. நாம் இந்த நாட்டின் மகன்களாக அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நாம் ஒன்றாக இருக்க வேண்டும் எதிரிகள் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கிறார்கள்.இந்த முயற்சிக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்தியாவின் ஒருங்கிணைப்பு சர்தார் பட்டேல் போன்ற தலைவர்களால் வழிநடத்தப்படவில்லை என்றால் நிலைமை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இணைக்கப்படாவிட்டால் என்ன நடந்திருக்கும்?