ரஃபேல் விமானங்களின் வருகை - மறைந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை நினைவு கூர்ந்த நெட்டிசன்கள்.!

ரஃபேல் விமானங்களின் வருகை - மறைந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை நினைவு கூர்ந்த நெட்டிசன்கள்.!

Update: 2020-07-30 14:27 GMT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களின் வருகையால் அவை இந்திய எல்லையில் நுழையும் படங்கள், மிக் ரக விமானங்களால் வரவேற்பு அளிக்கப்பட்ட விதம், கடற்படை விமானம் தாங்கிக் கப்பல் அளித்த வரவேற்பு, அம்பாலா விமானப் படைத்தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அளிக்கப்பட்ட வரவேற்பு என்று சமூக ஊடகங்கள் அதகளப்பட்டன.

அதே சமயத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் நல்ல முறையில் கையெழுத்தாகி ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர காரணமாக இருந்த மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை பல அரசியல் தலைவர்களும் நெட்டிசன்களும் நினைவு கூர்ந்தனர். மனோகர் பாரிக்கர் அவர்கள் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தான் அடுத்த தலைமுறை போர் விமானங்களான ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரும் பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சரும் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். துரதிருஷ்டவசமாக இன்று அதே விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படுவதைக் காண அவர் உயிரோடு இல்லை. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாரிக்கர் கடந்த ஆண்டு மார்ச் 17 அன்று உயிரிழந்தார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு எதிராக பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் மீது இருந்த வெறுப்பு காரணமாக அவரை ஊழல் கறைபடிந்தவர் என்று காட்டுவதற்காக உடல்நலமின்றி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மனோகர் பாரிக்கரை சந்திக்கச் சென்று விட்டு, ரபேல் ஒப்பந்த விஷயத்தில் தன்னை மோடி கலந்து ஆலோசிக்கவில்லை என்று அவர் கூறியதாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.

கேன்சரின் கடைசிக் கட்டத்தில் எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரிக்கர் ராகுல் காந்தியின் கீழ்த்தரமான செயலால், அந்த நிலையிலும் 'என்னுடன் செலவழித்த 5 நிமிடங்களில் நீங்களோ நானோ ரஃபேல் என்ற பெயரைப் பயன்படுத்தவும் இல்லை அதைப் பற்றி ஆலோசிக்கவும் இல்லை' என்று அறிக்கை விட நேர்ந்தது. இத்தகைய கீழ்த்தரமான செய்கைகளால் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் இருக்கிறது என்று தனது 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இதைப் பற்றியே பேசி வந்த ராகுல் காந்தி முதல் முறையாக அமேதி தொகுதியில் தோற்றதோடு தற்போது ரஃபேல் பற்றி வாயே திறப்பதில்லை.

இவையெல்லாம் நெட்டிசன்களால் நினைவுகூரப்பட்டதோடு மனோகர் பாரிக்கரின் இழப்பை உணர்வதாகவும் பலரும் பதிவிட்டனர். தற்போதைய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரான்ஸுடன் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தான போது மனோகர் பரிக்கர் பதிவிட்ட ட்வீட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மறைந்த மனோகர் பாரிக்கரை எண்ணி பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிவிட்ட ட்வீட்டில் பாரிக்கரை நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டார்.

புனே, சிவாஜி நகர் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சித்தார்த் ஷிரோலே "உண்மையிலேயே உங்கள் இழப்பை இன்று உணர்கிறோம் சார்" என்று பதிவிட்டுள்ளார்.

"ரஃபேல் என்று சொன்னாலே மனோகர் பாரிக்கர் என்ற பெயர் தான் என் காதுகளில் விழுகிறது" என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்தார். மற்றொருவரோ "இந்த தேசம் தங்களுக்கு கடன் பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

இப்படி பலரும் பலவிதமாக மனோகர் பாரிக்கரை நினைவு கூர்ந்தனர். பிற கட்சிகளைப் போல் ஒரு தலைவரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ மட்டுமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து அவர்களை கொண்டாடுவதுதான் பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பே.

Similar News