பிரணவ் ஜூவல்லரி 100 கோடி மோசடி வழக்கு - நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பியுள்ளது.

Update: 2023-11-25 03:30 GMT

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு பிரணவ் ஜுவல்லரி நகை கடை செயல்பட்டது. இந்த கடையின் கிளைகள் மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை, உட்பட எட்டு இடங்களில் இருந்தன. இந்த கடை நிர்வாகத்தினர் பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். கவிச்சிகரமான இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள் அந்த நகை கடையின் திட்டங்களில் சேர்ந்தனர். ஆனால் பலர் சீட்டுகள் முதிர்வடைந்துவிட்ட நிலையில் அதற்குரிய பணத்தையும் நகையும் வழங்காமல் அந்த கடை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார் இருந்தது.


100 கோடியளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அத்துடன் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளரான மதன் செல்வராஜ் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இரண்டு பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது.


இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்க நகைகளும் 23 புள்ளி 70 லட்சம் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் ஓரிரு நாட்களை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


SOURCE :Thecommunemag.com

Similar News