தொலைதூர இணைய வழி படிப்புகளுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் - பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

அனைத்து விதமான பல்கலைக்கழகங்களும் தொலைதூர இணையவழி படிப்புகளுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-12-01 05:45 GMT

பல்கலைக்கழக மானிய குழுவின் செயலர் பி.கே.தாக்கூர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-


உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர, திறந்த வெளி மற்றும் இணைய வழி படிப்புகளை கற்றுத் தருவதற்கு பல்கலைக்கழக மானிய குழுவின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமான ஒன்று என்று விதியில் இருக்கிறது. இந்த நடைமுறைகள் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் விலக்கு தரப்பட்டிருந்தது. அதன்படி பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி வழங்கியுள்ள தகுதிகள், கட்டமைப்பு வசதிகளை கொண்டிருந்தால் முன் அனுமதி இன்றி தொலைதூரத் திறந்தவெளி மற்றும் இனிய வழியில் படிப்புகளை தொடங்கிக் கொள்ளலாம்.


இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 562 வது அலுவல் கூட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேற்கொண்ட முடிவுகளின் படி தொலைதூர, திறந்த வெளி மற்றும் இணைய வழியிலான  படிப்புகளை தொடங்குவதற்கு அனைத்து விதமான பல்கலைக்கழகங்களும் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த விதிமுறை திருத்தங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை http://www.ugc.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





 


Similar News