'இந்தியாதான் தொழில் துவங்க உகந்த இடம்' - ஜப்பானின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, குவியப்போகும் முதலீடுகள்

குவாட் கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தொழிலதிபர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-05-25 13:44 GMT

குவாட் கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தொழிலதிபர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் கூட்டமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்தது. இதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நரேந்திர மோடி ஜப்பான் சென்று திரும்பியுள்ளார்.

இந்த ஜப்பான் பயணத்தில் அவர் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள் மற்றும் அதனால் அந்த நிறுவனங்கள் அடையக்கூடிய பலன்கள் குறித்து விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் 34 ஜப்பானிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சி.இ.ஓ கள் பங்கேற்றனர். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் முதலீடு செய்ய திறன் கொண்ட நிறுவனங்கள் ஆகும்.

ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், இரும்பு, தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி (JIBCC) போன்ற இந்தியா மற்றும் ஜப்பானில் முக்கிய வணிக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வட்டமேஜை மாநாட்டில் ஹோண்டா மோட்டார், நிசான் மோட்டார் கார்ப்பரேஷன், டொயோட்டா மோட்டார் கார்பொரேஷன் உள்ளிட்ட பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Source - News 18 Tamil Nadu

Similar News