தமிழ்நாட்டின் சிறப்புகளை பறைசாற்றிய பிரதமர் மோடி - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் அதிகம் இடம் பெற்ற தமிழ்நாடு
பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்வு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது .இதுவரை 99 உரைகள் முடிந்துள்ளன. நாளை மறுநாள் 100வது உரை ஒலிபரப்பப்பட உள்ளது .இதுவரை ஒளிபரப்பப்பட்ட உரைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பிரதமர் மோடியின் இதுவரையிலான உரையில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம், தமிழர்களின் தனித்திறன்கள் போன்றவை அதிகம் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்து உள்ளனர். "உலகின் பழமையான மொழி தங்களது நாட்டைச் சேர்ந்தது என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்", "அழகான உலக புகழ் பெற்ற மொழியை கற்கவில்லை என்பதில் வருத்தம் கொள்கிறேன்" மற்றும் திருக்குறளின் சிறப்பம்சங்கள், அவ்வையார் பாட்டு என்பன போன்ற தமிழ் மொழியை போற்றும் பல வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய ஜனநாயக மரபை உத்திரமேரூர் கல்வெட்டு அப்போது எடுத்து இயம்பியதை சுட்டிக்காட்டி உள்ளார். தமிழகத்தின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கிராமப்புற கலைகளை எடுத்துரைத்துள்ளார். வேலூரில் நாகை நதியை மீட்டெடுக்க 20,000 பெண்கள் ஒன்றுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் புயலை தடுத்து மண்ணைக் காக்க பனை மரங்கள் நடுவது போன்ற பெண்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார். தமிழக விவசாயிகளை பலமுறை புகழ்ந்துள்ளார்.
'சுகன்யா சம்ரித்தி 'திட்டத்தின் கீழ் 175 குழந்தை திருமணங்களை தடுக்கவும் பெண்களுக்காக சுமார் 60,000 கணக்குகளை தொடங்கவும் முயற்சித்த கடலூர் மக்களின் முயற்சிகளை பாராட்டியுள்ளார். சென்னையைச் சேர்ந்த சுசித்ரா ராகவாச்சாரியின் வேண்டுகோளை ஏற்று குடிமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் .மதுரையில் சலூன் கடை நடத்திவரும் கே.சி மோகன் தனது மகளின் கல்விக்காக சேமித்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சேவைக்காக கொரோனா காலத்தில் செலவு செய்ததை குறிப்பிட்டுள்ளார்.