தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு ரூபாய் 670 கோடி கூடுதல் வட்டி செலவு - இந்திய தணிக்கை துறை அதிர்ச்சி தகவல்!

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேராததால் தமிழக அரசுக்கு ரூபாய் 670 கோடி கூடுதல் வட்டி செலவு ஏற்பட்டதாக இந்திய துணை தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-04-22 07:00 GMT

தமிழக சட்டசபையில் இந்திய தணிக்கை துறை தலைவரின் அறிக்கைகள் நேற்று வைக்கப்பட்டன . கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-


தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 2017 - 18 ஆம் ஆண்டில் ரூபாய் 21 ஆயிரத்து 594 கோடி என்ற அளவில் இருந்து 2020 -21 ஆம் ஆண்டில் ரூபாய் 62,326 கோடியாக உயர்ந்தது. 2021 - 22 ஆம் ஆண்டில் ரூபாய் 46 ஆயிரத்து 538 கோடி என்ற அளவில் குறைந்தது. ஆனால் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து வரும் போக்கில் இருப்பதால் 2023 - 24 ஆம் ஆண்டில் அதை நீக்குவது சாத்தியமில்லாததாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 202021 ஆம் ஆண்டில் ரூபாய் 93 ஆயிரத்து 983 கோடி என்ற அளவில் இருந்த நிதி பற்றாக்குறை  2021 - 22 ஆம் ஆண்டில் ரூபாய் 81 ஆயிரத்து 835 கோடியாக குறைந்து இருக்கிறது.


2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது . 19 ஆண்டுகளாகியும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு சேரவில்லை. அதற்கான நிதி மேலாளரையும் நியமிக்கவில்லை . புதிய ஓய்வூதிய திட்ட பங்களிப்பு தொகையை தொடர்ந்து எல்.ஐ.சி மற்றும் கருவூல பத்திரங்களில் அரசு முதலீடு செய்து வந்தது .எல்.ஐ.சி மற்றும் கருவூல பத்திர முதலீடுகளில் இருந்து வரும் ஆதாயம்  வருங்கால வைப்பு நிதிக்காக ஈடாக வழங்கிய வட்டி சதவீதத்தை விட மிக குறைவாக இருக்கிறது. 


எனவே இதில் ஏற்படும் வேறுபாட்டை அரசு ஏற்றதால் தவிர்த்திருக்க கூடிய செலவு ஏற்பட்டது. அந்த வகையில் வேறுபாட்டு வட்டி தொகையாக ரூபாய் 670.36 கோடியை அரசு நடப்பாண்டில் செலுத்தியது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து நிதி மேலாளரை நியமித்திருந்தால் இந்த வட்டியை செலுத்த தேவை வந்திருக்காது. மேலும் தற்போது அரசு வழங்கும் ஜி.பி.எப் வட்டி சதவீதத்தை விட கூடுதல் சதவீத வட்டியை சந்தாதாரர்கள் பெற்றிருப்பார்கள்.சந்தாதாரர்களுக்கு செலுத்த வேண்டிய கூடுதல் வட்டியால் மாநில வருவாய் வகை செலவினத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் .


இது குறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டது . அந்த குழு தனது அறிக்கையை 27.11.2018 அன்று வழங்கியது. அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் நிதி மேலாளர் மூலமாக நிதியை முதலீடு செய்வது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Similar News