கிஸான் கிரெடிட்‌ கார்டுதாரர்கள் 1.2 கோடி பேருக்கு ₹ 89,810 கோடி குறைந்த வட்டி கடன் - #AtmaNirbharBharat நிதித் தொகுப்பிலிருந்து மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் நிதி உதவி!

கிஸான் கிரெடிட்‌ கார்டுதாரர்கள் 1.2 கோடி பேருக்கு ₹ 89,810 கோடி குறைந்த வட்டி கடன் - #AtmaNirbharBharat நிதித் தொகுப்பிலிருந்து மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் நிதி உதவி!

Update: 2020-07-29 10:35 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஆரம்ப காலத்தில் தொழில்கள் மற்றும் வியாபாரங்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் பல தொழில்கள் இன்னும் முழுமையாக இயங்க முடியாமலும் பொருளாதார நசிவையும் சந்தித்து வருகின்றன.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கொரோனா வைரஸ் தொற்று பரவல் பெருமளவில் பாதித்து உள்ளதால் மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கும் உதவும் வண்ணம் பொருளாதார மீட்பு கொள்கையை வெளியிட்டு ₹ 20.97 லட்சம் கோடி மதிப்பிலான உதவித் திட்டங்களை அறிவித்தது. அவ்வப்போது இந்த திட்டங்களின் கீழ் பல துறை சார்ந்த பணியாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி உதவியை அறிவித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிஸான் கிரடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பார்கள் மற்றும் மீனவர்களுக்கு மானிய வட்டியில் கடன் அளித்துள்ளது. ₹ 20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு நிவாரண நிதியில் கிஸான் கிரடிட் கார்டுகள் மூலம் 2.5 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ₹ 2 லட்சம் கோடி அளவில் மானிய வட்டியில் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த அறிவிப்பின் படி 1.2 கோடி எண்ணிக்கையிலான கிஸான் கார்டு வைத்திருக்கும் பயனாளர்களுக்கு ₹ 89,810 கோடி அளவிலான நிதி மானிய வட்டியில் கடனாக வழங்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கரீப் பருவ விதைத்தல் மற்றும் அதைச் சார்ந்த விவசாயப் பணிகளுக்கு உதவும் வண்ணம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"24.07.2020 அன்று நிலவரப்படி 111.98 கிஸான் கார்டுதாரர்களுக்கு #AatmanirbharBharat கீழ் அறிவிக்கப்பட்ட ₹ 2 லட்சம் மானிய வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையில் ₹ 89,810 கோடி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது" என்று நிர்மலா சீதாராமன் பதிவிட்ட ட்வீட்டில் கூறப்பட்டு இருக்கிறது.

கடந்த ஜூன் 30 அன்று வரை 70.32 கிஸான் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ₹ 62,870 கோடியை விட தற்போது ₹ 26,940 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

Similar News