ரூ.25 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு: சரத் பவாரை நெருங்கியது அமலாக்கத்துறை!!

ரூ.25 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு: சரத் பவாரை நெருங்கியது அமலாக்கத்துறை!!

Update: 2019-09-25 11:17 GMT

மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்ற விவகாரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அவரது உறவினரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்படி  அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.


அஜித் பவார் மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி இயக்குநராக பதவி வகித்த காலத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கடன் கொடுக்கப்பட்டதில் ரூ. 25 ஆயிரம் கோடி அளவுக்கு மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக அப்போதே புகார் எழுந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் நடை பெற்ற கால கட்டத்தில் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அடுத்து சென்ற 2015ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தில் சுனில் அரோரா என்பவர் பொதுநல வழக்கொன்றை தொடுத்தார்.


அந்த புகாரில் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோரின் பெயர்களை குறிப்பிட்ட அவர் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிக்கு 25,000 கோடி ரூபாய் வரை அவர்கள் இழப்பு ஏற்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். சரத் பவாரின் அறிவுறுத்தலின்பேரில், வங்கியில் முக்கிய பொறுப்புகளை வகித்த பலர் திட்டமிட்டு செயல்பட்டு இதை செய்ததாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுனில் அரோரா அந்த வழக்கில் கோரியிருந்தார்.


இதை உயர்நீதிமன்றம் விசாரித்தது, அப்போது சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும்படி, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவுக்கு சென்ற மாதம் உத்தரவிட்டது. இந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சரத் பவார், அஜித் பவார் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.


இதை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை நேற்று வழக்குப்பதிவு செய்தது. மேலும் சரத் பவார், அஜித் பவார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.


பல முறை பல்வேறு ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்த சரத் பவாரின் 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.


https://www.polimernews.com/dnews/81873/


Similar News