இலங்கை அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பின் ஒப்பந்தத்தால் உருவான கப்பல் போக்குவரத்து!
நாகப்பட்டினத்திற்கும் இலங்கை யாழ்ப்பாணத்திற்கும் இடையே கப்பல் போக்குவரத்து வருகிற பத்தாம் தேதி தொடங்க உள்ளது.
ஆங்கில ராஜகாலத்தில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 1914 ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அதன் பிறகு வீசிய அதிதீவிர புயலால் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த நிலையில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது பிறகு 1965 ஆம் ஆண்டில் இருந்து ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே பயணிகள் போக்குவரத்து சேவை நடந்தது. இந்த சேவையும் 1981 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்தியா இலங்கை இடையே பயணிகளுக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்க பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டன.
கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி உடன் இரு நாடுகளுக்கு இடையே உறவு மேம்படுத்துது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்த இலங்கையின் யாழ்ப்பாணம் காங்கேயசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது தொடர்பாக இரு நாடுகளிடையே புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்று கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் தொடங்கின.
துறைமுகத்தை ஆழப்படுத்துதல், பயணிகள் முனையம், சுங்க மற்றும் குடியுரிமை அறை மற்றும் பயணிகள் அறை உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சேவைக்காக இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணிகள் நடந்தது. தற்போது கப்பல் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது இந்த பயணிகள் கப்பலுக்கு 'சிரியாணி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கொச்சினில் இருந்து நாகப்பட்டினத்திற்கு வருகை தர உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் சிரியாணி கப்பல் மூன்று முதல் நான்கு மணி நேரங்களில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு சென்றடையும். பயணிகள் ஒருவருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூபாய் 6500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளை கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட் விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI