ஈரோட்டில் போதை ஊசி - போதையின் பிடியில் தள்ளாடும் தமிழகம்

போதை ஊசி செலுத்திக் கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-08 10:00 GMT

ஈரோடு அருகே போதை ஊசி செலுத்தி கொண்ட  7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் புதுடெல்லியில் இருந்து கூரியரில் போதை மாத்திரை வாங்கியது தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கருப்பசமி கோவில் பகுதியில் சிலர் போதையில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போதுஅங்கு ஏழு பேர் தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்தி கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு :-

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்,யுவராஜ் விக்னேஷ், மற்றொரு யுவராஜ் சிந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ்,அந்தியூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கண்டன்,ஆகிய 7 பேர் டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் புதுடெல்லியில் உள்ள நிறுவனத்தில் இருந்து கூரியர் மூலம் 100 எண்ணிக்கை கொண்ட போதை மாத்திரையை ரூபாய் 14 ஆயிரத்துக்கும் வாங்கியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மலை கருப்பசமி கோவில் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்திக் கொண்டு உள்ளனர். மேலும் சிகரெட்டை வாங்கி போதை மாத்திரைகளை கரைத்த தண்ணீரில் நனைத்து அதை பிடித்து உள்ளனர்.

இதனால் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் விழுந்து கிடந்து உள்ளனர் மேற்கண்ட அதிர்ச்சி தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர் அந்தியூர் பகுதியில் இதுபோல் போதை மாத்திரைகளை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.





 


Similar News