இலங்கை கடலோர காவல்படை அட்டூழியம் - காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு .
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்களின் விசை படகு பறிமுதல் செய்யப்பட்டது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர். மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் உலகநாதன் இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கீழ காசாக்குடி மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்தி, செல்வமணி ,அசோகன் மதன், அபிஸ், மணிவண்ணன் உட்பட 12 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை முல்லைத் தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கீழகாசாக்குடி மேடு மீனவர்களின் விசைப்பலகை சுற்றிவளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்தது. மேலும் இலங்கை கடற்படை மீனவர்களின் படகை பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர் .
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காரைக்கால் மேடு மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் வலையை சேதப்படுத்தியும், ஜி.பி.எஸ் கருவி, டீசல், மீன் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்று இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது குறிப்பிடத்தக்கது .தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கை காரைக்கால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.