ஸ்டாலின் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி 3 பேர் பலி

ஸ்டாலின் பாதுகாப்பிற்கு சென்ற வாகனம் மோதி 3 பேர் பலி

Update: 2019-02-18 03:53 GMT

விழுப்புரம் அருகே, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 'எஸ்கார்டு' சென்று திரும்பிய போலீஸ் ஜீப் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில், நேற்று நடந்த கட்சிப் பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில், கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும், முதல்வர், நாராயணசாமியை சந்திக்க சென்றார்.


புதுச்சேரியில் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து விட்டு அங்கிருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார். அதன்பிறகு விழுப்புரத்தில் இருந்து சென்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் புதுச்சேரியில் இருந்து மாலையில் விழுப்புரம் புறப்பட்டனர். இவர்கள் வந்த வாகனத்தை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் டிரைவரான சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம், மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை கடந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் வந்து கொண்டிருந்தது.



அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தறிகெட்டு ஓடியது. அந்த சமயத்தில் எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக தனித்தனியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் மீது கண் இமைக்கும் நேரத்தில் போலீஸ் வாகனம் மோதியது. மேலும் வலதுபுற சாலையோரம் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (வயது 60) என்பவர் மீதும் மோதிவிட்டு அங்குள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டங்கியை சேர்ந்த முத்து மகன் பாபு(30), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையான்குளத்தை சேர்ந்த காசிலிங்கம் மகன் திருமுருகன்(30) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


Picture Courtesy : Daily Thanthi


Similar News