தொடர்ந்து நான்காவது ஆண்டாக சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது.

Update: 2022-10-11 08:00 GMT

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால் அந்த வங்கிகளில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு வைத்திருந்தனர். அவர்கள் வரி ஏய்ப்பு செய்வதால் அந்தந்த நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே இதற்கு முடிவு கட்ட அந்த வங்கி கணக்கு விவரங்களை பெறுவதற்காக தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசுடன் செய்து கொண்டன. இதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆனால் இந்தியாவிடம் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் இந்தியர்களின் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.இந்த நிலையில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தனர்.


இந்த நான்காவது தொகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தனி நபர்கள் நிறுவனங்கள் ஆகியோரின் வங்கு கணக்கு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.பெரும்பாலும் தொழிலதிபர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவற்றில் இந்தியர்களின் பெயர்,முகவரி, வங்கியின் பெயர் , கணக்கு எண், கணக்கில் நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் கணக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளது? எத்தனை பேரின் கணக்குகள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.ரகசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பதே அதற்கு காரணம். ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை அந்த நபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் வருமான வரி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள்.


வருமானத்தை மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி போன்ற குற்றங்களை கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு அடுத்த கட்ட தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கும். இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கி கணக்கு தகவல்களை  பகிர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.





 


Similar News