உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதற்கு இந்தியா பெருமை கொள்வதாக பாரத பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதற்கு இந்தியா பெருமை கொள்வதாக பாரத பிரதமர் மோடி பெருமிதம்

Update: 2018-08-26 11:07 GMT



‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் வாயிலாக  47-ஆவது முறையாக மக்களிடம் பேசிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ரக்ஷாபந்தன், ஜென்மாஷ்டமிக்கான இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தப் பண்டிகை பல நூற்றாண்டுகளாக சமூக நல்லிணக்கத்திற்கான பெரிய எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் கூறினார்.


கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் வரலாறு காணாதவகையில் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, பாதிப்புகளில் இருந்து மீள ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை உள்ளிட்டோர் முழு வீச்சில் களப்பணியாற்றியதாக கூறினார். இந்திய அரசியலுக்கு முன்னாள் பாரத பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் புதிய அடையாளத்தை கொடுத்திருப்பதாக புகழாரம் சூட்டிய பிரதமர், இஸ்லாமிய பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் தனது தலைமையிலான அரசு மேள்கொள்ளும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.



பின்னர், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதற்கு இந்தியா பெருமை கொள்வதாக புகழாரம் சூட்டினார்.



ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி மகத்துவம் இருக்கிறது.  தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதே போல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம் உள்ளது. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் நமது வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.



மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தேசத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.




மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப் பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
பாரத் ரத்னா விருது வென்ற டாக்டர். எம். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கட்டிடக்கலையை போற்றும் விதமாகவும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, தனது ‘மன் கி பாத்’ உரையில் தெரிவித்தார்.




Similar News