மாதந்தோறும் மின்கட்டணம் மாற்றி அமைப்பதை தமிழக அரசு ஏற்காது - தி.மு.க'வின் அடுத்த வாக்குறுதியும் காலி

மத்திய அரசின் மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்க மாட்டார். எனவே தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கட்டணம் மாற்றியமைக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கூறினார்.

Update: 2023-01-21 03:00 GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க விளையாட்டு அணியின் நேர்காணல் நிகழ்ச்சி இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இந்த நேர்காணலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி முன்னிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- மத்திய அரசு மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை போன்று மின்சார கட்டணத்திலும் அடிக்கடி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். தனியாரிடம் மின்சார வாரியம் செல்லும் போது தமிழ்நாட்டில் கருணாநிதி கொண்டு வந்த சிறப்பு வாய்ந்த திட்டமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அதே போன்று 100 யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறி, கைத்தறி மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம் மானியம் எல்லாம் கேள்விக்குறியாகி விடும் வகையில் மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா அமைந்துள்ளது.


எனவே இந்த மசோதாவை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒருபோதும் ஏற்க மாட்டார் . அனுமதிக்க மாட்டார். எனவே மாதம் ஒருமுறை மின்சார கட்டணத்தில் மாற்றம் வரும். உயரும் என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டாம். மாதாந்திர மின்கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. ரெண்டு கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களில் நேற்று வரையில் 2 கோடியே ஒரு லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.இது சிறப்பு வாய்ந்த முயற்சியாகும். மின்சார வாரியத்தை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது . இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக இப்பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி தந்துள்ளார். முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் . எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் தேர்தல் களத்தில் நின்று கடுமையான பணியாற்றுவோம்' இவ்வாறு அவர் கூறினார்.





 


Similar News