இராவணக்கோட்டம் படத்தை தடை செய்ய வேண்டும்- தமிழ்நாடு நாடார் சங்கம் மனு
காமராஜர் பற்றிய தவறான கருத்துக்களை கொண்ட ராவணக் கோட்டம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் தமிழ்நாடு நாடார் சங்கம் மனு கொடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் தலைமையில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் , கிராமணி வாழ்வுரிமை நல சங்க தலைவர் பச்சையப்பன் , தமிழ்நாடு நாடார் சங்க பொது செயலாளர் வீரக்குமார் , நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மயிலை தொகுதி தலைவர் செல்வகுமார் ஆகியோர் நேற்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர் . அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் ராவணகோட்டம் திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றதுடன் பல தவறான கருத்துக்களை விக்ரம் சுகுமாரன் கூறினார். காமராஜர் ஆட்சியில் தான் பனைவெல்லம் காய்ச்ச விறகு தேவைப்பட்டதால் சீமை கருவேல மரங்களை அவர் கொண்டு வந்தார் என்றும் கீழ்த்தூவல் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அவர் ஆட்சியில் தான் என்றும் கூறியிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு நடந்த முதுகுளத்தூர் கலவரத்தை அடக்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்தது. இது போன்ற கருத்துக்களால் தென் மாவட்டங்களில் கலவரம் வரக்கூடும் என்று பத்திரிகையாளர்கள் கூறியதற்கு கலவரம் ஏன் ஏற்படவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் . தவறான கருத்துக்களை பரப்பி சாதி உணர்வுகளை தூண்டிவிட்டு பொருளாதார பயன் அடைய சில இயக்குனர்கள் முயற்சிக்கின்றனர் .
சீமை கருவேல மர விதைகள் 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் விமானம் மூலம் தூவப்பட்டது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த மரம் உள்ளது . காமராஜர் மீது ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அது உண்மை என்று நம்பி காமராஜர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இப் படத்தை எடுத்துள்ளனர் . எனவே இராவணக்கோட்டம் படத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.