ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு- வெள்ளிக்கிழமை பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 32 பேர் உடல் சிதறி பலியாகினர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்- இ- பார்ஞ்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி மையம் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் மற்றும் கல்லூரிதத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள உதவுகிறத. இந்த நிலையில் நேற்று இந்த கல்வி மையத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக விடுப்பு தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது. இதையொட்டி உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர்.
அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுவெடிப்பில் கல்வி மைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்தனர். இதனிடையே குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தலிபான் வீரர்கள் அந்த பகுதியில் சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறி வைத்து ஐ. எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.