மின் வாகனக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்!
மின் வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்சம் ரூபாய் 4,150 கோடி முதலீட்டில் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைத்தால் வரிசலுகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 10 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. 2030ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக உயரும் என்றும் ஐந்து கோடி நேரடி மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார வாகன உற்பத்தியில் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா போன்ற சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்காக மின் வாகன கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது .அதற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது .இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மின்வாகன கொள்கைப்படி இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் டாலர் அல்லது 4,150 கோடி முதலீட்டில் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்சவரம்பு கிடையாது .மின்வாகன தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்கள் குறைவான சுங்க வரியுடன் குறிப்பிட்ட அளவு கார்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும்.
சுங்கவரிச்சலுகை பெற அந்த நிறுவனங்கள் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் அந்த வங்கி உத்தரவாதம் பயன்படுத்திக்கொள்ளப்படும். மின்வாகன கொள்கைப்படி ஒரு நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்குள் தொழிற்சாலை நிறுவி வணிக ரீதியான உற்பத்தியை தொடங்கி விட வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள் 50 சதவீத உற்பத்தியை எட்ட வேண்டும். மின்வாகன சந்தையில் சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் இந்தியாவை மின்வாகன உற்பத்தி கூடமாக தரம் உயர்த்தவும் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் இந்திய நுகர்வோர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் .கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும், காற்று மாசு குறையும், வர்த்தக பற்றாக்குறை குறையும் ,சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மக்களின் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும். 'மேக் இன் இந்தியா 'திட்டம் ஊக்குவிக்கப்படும். உற்பத்தியாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி உருவாகும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI