நாட்டின் வன பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்- ஐ.நாவில் இந்தியா தகவல்!

வன பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் இந்தியா முன்னேற்றம் பெற்றுள்ளதாக ஐ.நாவின் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-13 13:42 GMT

வன பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களை செய்துள்ளதாகவும் இதனால் வனப்பரப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.நா வன அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது. உலக அளவில் 2010- 2020 காலகட்டத்தில் சராசரி வருடாந்திர வனப்பரப்பு அதிகரிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை இடத்தில் மே 6 முதல் பத்தாம் தேதி வரை நடைபெற்ற வன அமைப்பின் 19 ஆவது அமர்வில் இந்தியா பங்கேற்றது.

ஆயிரத்துக்கு மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலி காப்பகங்கள், உயிர்கோள காப்பகங்கள் மற்றும் பிற வனவிலங்கு வாழ்விடங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை விரிவுபடுத்தி பல்லுயிர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக அமர்வில் இந்தியா தெரிவித்தது .மேலும் அமர்வில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

புலி திட்டத்தின் 50 ஆண்டுகளையும் யானை திட்டத்தின் 30 ஆண்டுகளையும் குறிக்கும் சமீபத்திய கொண்டாட்டங்கள், இனங்கள் மற்றும் வாழ்விட பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிபாட்டை அடிக்கோடிட்டு காட்டுகின்றன .கூட்டு முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு பெரிய பூனை இனங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியாக சர்வதேச கூட்டணியை இந்தியா உருவாக்கியது .

தனிநபர்கள் ,சமூகங்கள் மற்றும் தனியார் துறையினரின் தன்ஆர்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கும் சந்தை அடிப்படையிலான பொறிமுறையாக 'கிரீன் கிரெடிட் புரோகிராம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வனத்தீ மேலாண்மை மற்றும் வனச் சான்றிதழில் கவனம் செலுத்தி 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தியா தலைமையிலான முன்னெடுப்பு டேராடூனில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. இந்த முன்னெடுப்பின் பரிந்துரைகளும் அமர்வில் முன் வைக்கப்பட்டுள்ளன.


SOURCE :Dinaboomi

Similar News