ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிதி கட்டமைப்பு மாநாடு- சென்னையில் நடக்கிறது

ஜி - 20 நாடுகளில் நிதி கட்டமைப்பு மாநாடு சென்னையில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று நிதி பொருளாதாரம் குறித்து விவாதிக்கின்றனர்.

Update: 2023-03-24 05:15 GMT

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட உலகின் சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக ஜி - 20 உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்கும். அதன்படி 2023 ஆம் ஆண்டின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.


கல்வி, நிதி, பொருளாதாரம் , உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம் பன்னாட்டு நல்வரவு எரிசக்தி பாதுகாப்பு பேரிடர் உதவி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த மட்டில் சென்னையில் கல்வி தொடர்பான மாநாடு கடந்த ஜனவரி 31 பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் நடந்தது. தற்போது நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு சென்னையில் இன்றும் நாளையும் நடக்கிறது .சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இந்த மாநாடு நடக்கிறது .


இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர் . இந்த மாநாட்டை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதி துறையின் தலைமை பொருளாதார  ஆலோசகர் கிளாரிலொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கி நடத்துகின்றனர் . இந்த மாநாடு குறித்து அனந்த நாகேஸ்வரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 


ஜி-20 நாடுகளின் நிதி தொடர்பான மாநாடு ஏற்கனவே பெங்களூருவில் நடந்தது . மார்ச் 24 மார்ச் 25 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற உள்ள இந்த மாநாடு ஜி-20 நாடுகளின் நிதி கட்டமைப்பு தொடர்பான இரண்டாவது மாநாடு ஆகும். நாட்டின் மொத்த வருமானம் ,சேமிப்பு , நுகர்வு, வேலை வாய்ப்பு குறித்த பொருளாதார அணுகுமுறையான மேக்ரோ பொருளாதார பிரச்சனைக்கு இந்த நிதி கட்டமைப்பு மாநாடு முக்கியத்துவம் அளிக்கிறது . இந்த மாநாட்டில் ஜி- 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள் பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட  பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.


இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் அடுத்த மாதம் வாஷிங்டனில் நடைபெறும் பல்வேறு நாடுகளின் நிதிமநந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர் கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும். தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு போன்றவை குறித்து மாநாட்டில் பங்குபெறும் பிரதிநிதிகள் அறிந்து கொள்ளும் வகையில் இரவு உணவின்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.



 


Similar News