3 மணி நேரத்தில் திருவாரூர் டூ சென்னை - பலருக்கு வாழ்க்கையளித்த மூளைச்சாவு அடைந்த இளைஞர்

சாலை விபத்தில் இறந்து மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Update: 2022-11-10 09:30 GMT

மயிலாடுதுறை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று காலை மூளைச்சாவடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வாலிபரின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி நேற்று மாலை  மருத்துவ குழுவினர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வாலிபரின் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.


முதலாவதாக இதயம், நுரையீரல் ஆகியவை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இந்த உடல் உறுப்புகள் அனுப்பப்பட்டன. திருச்சி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இரவு 10 மணிக்கு சென்னை விமானம் மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தலா ஒரு சிறுநீரகம்,மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கல்லீரல் தானமாக எடுத்துச் செல்லப்பட்டன.


திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டன.முன்னதாக இறந்த வாலிபரின் உடலுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் டாக்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சாலை விபத்தில் முளைச்சாவடைந்தவரின் இதயம் திருவாரூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.





 


Similar News