லண்டன் வானில் இரட்டை வானவில் தோன்றிய அதிசயம்
மறைந்த எலிசபெத் ராணிக்கு அஞ்சலி செலுத்த லண்டன் வானில் இரட்டை வானவில் தோன்றியதாக மக்கள் அதிசயத்தனர்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்து பால் மோரல் கோட்டையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்ததை தொடர்ந்து லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் வாயிலில் பூங்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
ராணியின் மறைவுக்கு இயற்கையும் அந்த அஞ்சலி செலுத்தியதோ என எண்ண தோன்றும் வகையில் லண்டன் நகரில் நேற்று முன்தினம் மழை பெய்து ஓய்ந்து மேகங்கள் மறைந்த நிலையில் வானில் இரட்டை வானவில் தோன்றிய அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இதைக்கண்ட பலரும் அதிசயத்தனர். மேலும் இது பலரையும் சிலிர்க்க வைத்தது. இந்த இரட்டை வானவில்லை கண்ட பலரும் தங்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் .அவை வைரல் ஆயின. மக்களில் சிலர் இந்த இரட்டை வானவில் ராணியின் நீண்டகால பாரம்பரியத்தை நினைவுகூர்வதாக தெரிவித்தனர்.
இன்னும் சிலரோ வானில் சோகம், வானில் மாயாஜாலம் என சிலிர்த்தனர். டுவிட்டர் சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் நாங்கள் "விண்ட்சார் கோட்டை பகுதிக்கு சென்றிருந்தோம். அப்போது என் மனைவியும் ,நானும் வானில் அதிசயமாக தோன்றிய இரட்டை வானவில்லை அண்ணாந்து பார்த்தோம். ராணி இந்த உலகில் இருந்து விடை பெற்று இருப்பதை காட்டும் நிகழ்வு இது என நாங்கள் அப்போது உணரவில்லை என தெரிவித்தார்.