'தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ' - நீக்குமா மத்திய அரசு? நிலைப்பாடு என்ன?

தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ'வை மத்திய அரசு பரிசீலனை செய்யும் வரை அந்த சட்டப்பிரிவு பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-13 07:00 GMT

தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ'வை மத்திய அரசு பரிசீலனை செய்யும் வரை அந்த சட்டப்பிரிவு பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது 124 ஏ என்கின்ற சட்டப்பிரிவு நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கொடுங்கோல் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போதும் அதன் பிறகும் பிரிவு 124 ஏ ஒழிக்கப்பட வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன.

மேலும் எந்த ஒரு குடியரசு நாட்டிலும் இதுபோன்ற சட்டம் இருக்க முடியாது என ஜவாஹர்லால் நேரு காலம் முதலே பலரும் கூறி வருகின்றனர். பிரிவு 124 ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. இருப்பினும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தியாவில் அது ஒழிக்கப்படவில்லை.

இந்த சட்டத்தின்கீழ் அரசுக்கு எதிராக பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் அல்லது நடந்துகொண்ட ஊக்குவித்தல் ஆகிய தேசத்துரோகம் என 124 ஏ கூறுகிறது. ஒருவர் மீது 124 ஏ பாய்ந்தால் அவர் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் இதுவே இந்த சட்டத்தின் விளைவாகும்.

மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், பகத்சிங் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சட்டப்பிரிவு ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வி கேட்பவரை அடக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது எனவும் கருத்து நிலவி வருகிறது, இதுமட்டுமின்றி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 124 ஏ பிரிவின் கீழ் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண பிரிவின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில்தான் பிரிவு 124 ஏ நீக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அது குறித்து மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது 124 ஏ நீக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மே 5'ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் சூரியகாந்தி, ஹீமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது, அப்பொழுது பிரிவு 124 ஏ 'வுக்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற ஆராயப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது மேலும் மத்திய அரசு பரிசீலிப்பதற்கு கால அவகாசம் உச்சநீதிமன்றம் வழங்கிய பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரிவு 124 ஏ மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது.

உடனே தேசத்துரோக சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பிரிவு 124 ஏ பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார், அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை இந்த பிரிவு பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது இந்த வழக்கு ஜூலை மூன்றாவது வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Source - Junior Vikatan

Similar News