என்னடா இப்படி பண்றீங்களேடா! - கதறும் ஏ.டி.எம் எந்திரம் - வேலூர் அருகே பரபரப்பு
பலமுறை முயற்சித்தும் பணம் வராததால் ஆத்திரமடைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கோடரியால் உடைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் ஊசூர் அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிலையத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று காலை 9 மணியளவில் ஊசூர் காலனியை சேர்ந்த கந்தன் என்ற கந்தசாமி என்ற கூலி தொழிலாளி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டு சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை .
இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடரி எடுத்து வந்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தார். மேலும் அதிலிருந்து சிதறிய பாகங்களை எடுத்து வெளியே வீசினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை தடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் அவர் எந்திரத்தை கோடரியால் உடைத்தார். இது குறித்து பொதுமக்கள் அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரிடம் இருந்து கோடரியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு அங்கு வந்து உடைக்கப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இது குறித்து போலீசார் கூறுகையில் "ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருட்டுப் போகவில்லை. பணம் எடுக்க முயற்சி செய்து பணம் வரவில்லை என்பதால் ஆத்திரத்தில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்ததாக கூறுகிறார் அவர். பணத்தை திருடு முயற்சி செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
SOURCE:DAILY THANTHI