பராமரிப்பின்றி கிடக்கும் தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் - நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா? அரசு கவனிக்குமா?

50 ஆண்டுகள் பழமையான தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இது நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-31 13:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியைச் சேர்ந்த முனுசாமி, மங்களம் தம்பதியினர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு  வேலை தேடி சென்றனர்.அப்போது அங்கு அவர்களுக்கு பிறந்த மகள்தான் வள்ளியம்மை. தென்னாபிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியுடன் இளம் வயதில் வள்ளியம்மை போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். இவருக்கு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசு 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அவரை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மையை காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.


அப்போது தாய் நாட்டு மக்களுக்காக தனது உயிரை  இழந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என காந்தியிடம் வள்ளியம்மை கூறியுள்ளார். 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி தனது 16 ஆவது வயதில் வள்ளியம்மை உயிரிழந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த காந்தி வள்ளியம்மையின் பூர்வீக கிராமமான தில்லையாடிக்கு கடந்த 1915 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி சென்று கிராம மக்களை சந்தித்து உரையாடினார். அவர் அமர்ந்து பேசிய இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. காந்தி நூற்றாண்டு விழா நடந்த போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் அமைத்தார்.அதில் பல அறிய புகைப்படமும் காந்தி தனது நண்பர் தில்லையாடியை சேர்ந்த சுப்ரமணிய பக்தர் என்பதற்கு தமிழில் எழுதிய கடிதங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


50 ஆண்டுகள் பழமையான தில்லையாடி தியாகி வள்ளியம்மை மணிமண்டபம் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் பராமரிப்பில் உள்ளது. தற்போது இந்த நினைவு மண்டபம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் மழைநீர் கசிந்து அறிய ஓவியங்கள் புகைப்படங்கள் வீணாகிவிட்டன. தில்லையாடி ஊராட்சி நிர்வாகத்தினர் மின்விளக்குகளை பராமரிப்பு செய்து வருகின்றனர். ஆனால் மின்சார வயர்கள் பழையதாக இருப்பதால் மின்விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இந்த வளாகத்தில் நூலகம் உள்ளதால் அதிகமான வாசகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே சேதமடைந்த நினைவு மண்டபம் கட்டிடத்தால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.





 


Similar News