ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவானவரா ? அவரின் நிலைப்பாடுகள் குறித்து வானதி சீனிவாசன் !

ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவானவரா ? அவரின் நிலைப்பாடுகள் குறித்து வானதி சீனிவாசன் !

Update: 2019-11-09 03:31 GMT

நேற்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமலஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேராக வீட்டுக்கு திரும்பினார். அங்கு தன வீட்டு வாசலில் காத்திருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.


அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி நிறம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன்.” என்று பேசினார் ரஜினி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.


ரஜினியின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், "ரஜினி கூறிய கருத்துகள் பாஜகவின் கருத்துகளோடு ஒத்துப் போகலாம், ஒத்துப் போகாமலும் இருக்கலாம். பல்வேறு சந்தர்ப்பங்களில் அதுவும் நடந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் ரஜினி பாஜகவில் சேரப் போகிறார் என்றும், ரஜினி பாஜகவுடன் இணைந்து செயல்படப் போகிறார் என்ற கருத்தையும் சிலர் உருவாக்க நினைக்கிறார்கள்.


ரஜினி தன்னுடைய அரசியல் நிலையை மக்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார். நான் எப்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். ரஜினி தொடர்பான கருத்து உருவாக்கத்திற்கு இன்று தனது பதிலைச் சொல்லியிருக்கிறார்.


காவி நிறம் என்பது இந்நாட்டின் நிறம். இங்கிருக்கும் நிறங்களில் அதுவும் ஒன்று. ஆனால், காவி நிறத்துக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அது தவம், தியாகம் உள்ளிட்டவற்றைக் குறிக்கக் கூடிய ஒரு நிறமாக இருக்கிறது. திருவள்ளுவருக்குக் காவி நிறம் அணிவித்தது கூட, இந்த மண்ணில் அவர் அப்படித்தான் பார்க்கப்பட்டு இருந்தார். அதை இங்குள்ள அரசியல் கட்சிகள் இடையில் அவர்களுடைய அரசியல் லாபங்களுக்காக மாற்றியது.


தனக்கும் பாஜக கட்சிக்கும் எவ்விதமான உறவு இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவருக்குக் கொடுக்கக் கூடிய நிறத்துக்குப் பதிலளித்துள்ளார். அதை அவருடைய கருத்தாக மட்டுமே பார்க்கிறோம். அவரது கருத்து சில நேரங்களில் எங்கள் கட்சிக்கு எதிராக இருப்பதும் உண்டு. அவர் ஒரு சுதந்திரமான மனிதர். அந்தக் கருத்துகளுக்கு மற்றவர்கள் நினைக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க முடியாது. ரஜினியின் கருத்தை அவரது கருத்தாக மட்டுமே பாருங்கள்.


பாஜக தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் வரவேற்றுக் கொண்டிருக்கக் கூடிய கட்சி. ரஜினிகாந்த் மட்டுமல்ல, அனைவரையும் பாஜகவுக்கு வரவேற்கிறோம்” என்று பேசியுள்ளார் வானதி சீனிவாசன்.


Similar News