பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் - உள்துறை மந்திரி அமித்ஷா சூளுரை

பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தேச விரோத செயல்பாடுகளையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா சூளுரைத்தார்.

Update: 2023-03-13 06:15 GMT

சி.ஐ.எஸ்.எப் என்று அழைக்கப்படுகிற மத்திய தொழில் பாதுகாப்பு படை 1969 ஆம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கப்பட்டதாகும் . இந்த படையின் 54- வது நிறுவன நாள் அணிவகுப்பு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய தொழில் பாதுகாப்பு பணியின் நிறுவன தினம் முதன்முறையாக தலைநகர் டெல்லிக்கு வெளியே ஹைதராபாத் ஹக்கீம் பேட்டையில் அமைந்துள்ள சி.ஐ.எஸ்.எப் தொழில் பாதுகாப்பு அகாடமியில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பல சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளது. காஷ்மீரில் வன்முறையும் வடகிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல்களும் கணிசமாக குறைந்துவிட்டன. மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு  நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற நிலையை அடைய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கு நிறைவேற வேண்டுமானால் விமான நிலையங்கள், துறைமுகங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பினை உறுதி செய்வது முக்கியமாகும்.


எதிர்காலத்தில் வரும் சவால்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை சந்திக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பிறவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் மதிய தொழில் பாதுகாப்பு படை தயார்படுத்துவதற்காக எந்த ஒரு வாய்ப்பையும் மத்திய உள்துறை அமைச்சகம் தவறவிடாது.


தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட முடியும் என்பதால் மத்திய தொழில் பாதுகாப்பு பணியின் பங்கு அதிகரிக்கும். பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்ற பிரதமர் மோடி அரசின் கொள்கை தொடரும். பிரிவினைவாதம், பயங்கரவாதம் ,தேசவராத செயல்பாடுகள் நாட்டில் எங்கு நடைபெற்றாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் இவ்வாறு அவர் கூறினார்.



 


Similar News