ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த என்னென்ன செய்ய வேண்டும்?- தீவிர திட்டமிடலில் மத்திய அரசு!

நாடாளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை அமல்படுத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சட்ட மந்திரி விளக்கம் அளித்தார்.

Update: 2023-03-18 11:45 GMT

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-

நாடாளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒரு நாடாளுமன்ற குழு ஆய்வு செய்து சில சிபாரிசுகளை அளித்துள்ளது. இந்த விவகாரம் மேற்கொண்டு ஆய்வு செய்வதற்காக சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் மக்கள் பணம் பெருமளவு மிச்சமாகும் .அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவும் நேரமும் மிச்சமாகும்.


மேலும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபடியே இருக்கும். இதனால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படும். அதே சமயத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் முறையை அமல்படுத்துவதற்கு முன்பு கட்டாயமாக செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில் ஐந்து பிரிவுகளுக்கு குறையாமல் திருத்தம் செய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். நாம் கூட்டாற்று முறையை பின்பற்றுவதால் அனைத்து மாநில அரசுகளின் சம்மதத்தையும் பெற வேண்டும் .


மேலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் வாங்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும். ஒரு எந்திரத்தின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். அதை மூன்று அல்லது நான்கு தேர்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 15 ஆண்டுகளுக்கு பிறகு எந்திரங்களை மாற்ற பெரும் பணம் செலவாகும் . மேலும் தேர்தல் பிரிவு ஊழியர்களும் பாதுகாப்பு படைகளும் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



 



 


Similar News