உலகின் மிக நீண்ட தூர நதி வழி சொகுசு கப்பல் சுற்றுலா- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் மற்றும் வங்காளதேசத்தை உள்ளடக்கி உலகின் மிக நீண்ட நதிவழி சொகுசு கப்பல் சுற்றுலாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்திர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பல்வேறு நதிகளின் வழியே வங்காளதேசம் வழியாக அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் மற்றும் வங்காளதேசத்தில் சில பகுதிகள் என 3,200 கி.மீ தூரத்துக்கு மேல் கொண்ட இந்த சுற்றுலா 51 நாட்கள் இருக்கிறது. இதில் உலக பாரம்பரிய தலங்கள், நதி படித்துறைகள், பாட்னா, சாகிப்கஞ்ச், கொல்கத்தா, டாக்கா போன்ற பெருநகரங்கள் என 50 சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சுந்தர்பன் டெல்டா மற்றும் காசரங்கா தேசிய பூங்கா உள்ளிட்ட புகழ்பெற்ற சரணாலயங்கள் வழியாகவும் இந்த சுற்றுலா நடைபெறுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நதிகள் ஆன கங்கை மற்றும் பிரம்மபுத்திரா வழியாக சென்று வரும் அலாதி இன்பத்தை இந்த சுற்றுலாக் கொடுக்கிறது. இந்தியா வங்காளதேசம் நாடுகளின் 27 நதி திட்டங்கள் வழியாக இந்த கப்பல் சென்று வருவது சிறப்பு. குறிப்பாக இரு நாடுகளின் கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் இந்த பயணம் வாய்ப்பளிக்கவும் முதல்முறையாக இந்தியாவில் கட்டப்பட்ட 'எம்.வி கங்கா விலாஸ்' என்ற சொகுசு கப்பல் மூலம் இந்த நதிவழி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கப்பலில் 18 கேபின்கள் உள்ளன.
கப்பலில் எல்.இ. டி டிவி, நவீன படுக்கை வசதி, பால்கனி மற்றும் உணவகம் ,ஸ்பா என ஏராளமான ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசுடன் இணைந்து அண்டாரா மற்றும் ஜே.எம் ராக்ஸி என்ற தனியார் நிறுவனங்கள் ஆடம்பர சொகுசு கப்பல் சுற்றுலாவை நடத்துகின்றன. கங்கை நதியில் கப்பல் சேவை தொடங்குவது ஒரு முக்கியமான தருணம் . இது இந்தியாவில் சுற்றுலாவின் புதிய யுகத்தை உருவாக்கும் . இது சுற்றுலாவை மேலும் நோக்க வைப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு வலிமையான இணைப்பு திட்டங்கள் அவசியம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் போக்குவரத்து முறையில் வளமான வரலாறு இருந்தபோதிலும் நதிநீர் வடிகலின் பயன்பாடு குறைவாக இருந்தது. ஆனால் நவீன இந்தியாவின் காரணத்துக்காக இந்தியா பண்டைய வலிமையை பயன்படுத்த தொடங்கி உள்ளது. நாட்டின் பெரிய ஆறுகளில் நீர்வழித்தடங்களை மேம்படுத்த புதிய சட்ட மற்றும் விரிவான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் கூறினார்.